ஞான கர்ம சமுச்சயம்
ஞான கர்ம சமுச்சய வாதம் (Jnana Karma Samuccaya) என்பதன் நேரடி பொருள் ஞானம் அல்லது அறிவு மற்றும் கர்மம் அல்லது சடங்குகளை ஒருங்கே இணைத்து செயல்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் தத்துவப் பள்ளி ஆகும்[1]. இத்தத்துவப் பள்ளியை நிறுவியவர் போதாயனர் ஆவார். வேதங்களில் கூறப்பட்ட யாகம், யக்ஞம் மற்றும் அன்றாடக் கருமங்களைச் செய்தபடி, மோட்சத்திற்கான பிரம்ம ஞானம் அடைவதே சிறப்பாகும் என்பது ஞான கர்ம சமுச்சயக் கோட்பாட்டின் நோக்கமாகும்.
- ஞானம் என்பது பிரம்மம் பற்றிய ஞானம் அல்லது புரிதலைக் குறிக்கிறது. குறிப்பாக பிரம்மத்தின் (இறுதி யதார்த்தம்) மற்றும் ஆத்மாவின் (தனிப்பட்ட சுயம்) இரட்டை அல்லாத தன்மை.
- கர்மா: சடங்கு செயல்கள், கடமைகள் மற்றும் வேதங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வகையான செயல்களையும் உள்ளடக்கியது.
- சமுச்சாயம்: "சேர்க்கை" அல்லது "தொகுப்பு" என்று பொருள்.
இந்து சமயத்தில் குறிப்பாக வேதாந்தத்தின் பிரம்ம சூத்திரம் அடிப்படையில், விடுதலைக்கான (மோட்சம்) பாதையாக அறிவு (ஞானம்) மற்றும் செயல் (கர்மா) ஆகியவற்றின் கருத்தைக் குறிக்கிறது. அடிப்படையில் இது உண்மையான சுயத்தை (ஆத்மா) பற்றிய அறிவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளைச் செய்வது இரண்டும் அவசியமா அல்லது பிரம்ம ஞானம் ஒன்று மட்டுமே விடுதலைக்கு போதுமானதா என்பதை விவாதிக்கிறது.
வேதாந்த இலக்கியம் வளர்ந்தபோது பிரம்ம சூத்திரம் அடிப்படையில் பிரம்ம ஞானத்தையும், கர்மாவையும் இணைக்க முடியுமா இல்லையா என்பது ஒரு குழப்பமாக இருந்தது. இந்த இணைப்பின் சாத்தியத்தை போதாயனரால் நிறுவப்பட்ட தத்துவப் பள்ளியை ஞானகர்மசமுச்சாயவாதம் என்று அறியப்பட்டது. இராமானுஜரின் விசிட்டாத்துவைதம்[2] இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் அத்வைதம் தத்துவத்தை ஆதரித்த ஆதிசங்கரர் உள்ளிட்ட அத்வைதிகள் ஞான கர்ம சமுச்சய வாதத்தை ஏற்கவில்லை.[3]
ஞானகர்மசமுச்சாயவாதக் கோட்பாடு
[தொகு]வேதாந்தத்தின் விசிட்டாத்துவைதம் தத்துவத்தின்படி, பிரம்மம் (கடவுள்), ஜீவர்கள் (தனிப்பட்ட ஆன்மாக்கள்) மற்றும் உலகம் ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. எனவே அடிமைத்தனத்தில் இருக்கும் ஒரு ஜீவன், ஞானத்தின் மூலம் தனது ஆத்ம இயல்பை உடல்-மன வளாகத்திலிருந்து வேறுபட்ட தூய ஆன்மாவாக உணர்ந்த பிறகும், உலகத்தையும் மற்ற ஜீவன்களையும் தன்னிடமிருந்து வேறுபட்டதாக உணர்ந்து கொள்கிறான். எனவே அவன் தனது கடந்த கால (ப்ராப்த) கர்மங்களின் விளைபொருளான உடலில் தொடர்ந்து வாழும் வரை, கர்மாவையோ அல்லது வேதங்களால் பரிந்துரைக்கப்பட்ட செயல்களையோ தனது கடமைகளாகச் செய்வதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே கர்மா மற்றும் விதிக்கப்பட்ட கடமைகளை தனது ஞானத்துடன் இணைப்பது அல்லது தான் ஆத்மா என்பதை அகநிலையாக உணர்தல் ஒரு பிரச்சனையல்ல.
அத்வைத வேதாந்தக் கோட்பாடு
[தொகு]விடுதலைக்காக (மோட்சம் எனும் பிறவாமை) அறிவையும் செயலையும் இணைப்பது என்ற கருத்தை, ஆதி சங்கரர் நிறுவிய அத்வைதம் பொதுவாக ஏற்கவில்லை. பிரம்மத்தைப் பற்றிய உண்மையான அறிவு, அடைந்தவுடன், அறியாமையையும் சடங்கு செயல்களின் தேவையையும் நீக்குகிறது என்று சங்கரர் வாதிடுகிறார். அறிவு மட்டுமே விடுதலைக்குக் காரணம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தின்படி, பிரம்மம், ஆத்மா (ஜீவனின் உண்மையான இயல்பு) மற்றும் உலகம் ஆகியவை ஒரே அடையாளமாகும். அவரைப் பொறுத்தவரை ஜீவன்களும் உலகமும் மாயையான உணர்வுகள் அரை இருட்டில் கயிற்றில் ஒரு பாம்பை காண்பவன் போல, ஞானம் அல்லது உண்மையை நேரடியாகவும் உடனடியாகவும் உணரும்போது மாயை மறைந்துவிடுகிறது. அதேபோல் ஒரு ஞானி தனக்கு வெளியே உள்ள எதையும் தன்னிடமிருந்து வேறுபட்டதாக காண மாட்டார். அவர் ஒரு யதார்த்தத்தை மட்டுமே காண்பார். எனவே இருமை உணர்வை முன்னிறுத்தி எந்த கர்மாவையும் செய்ய அவரால் இயலாது. இதன் விளைவாக, சர்வ கர்ம பரித்யாகம் (அனைத்து செயல்களையும் முற்றிலுமாக கைவிடுதல்) அவருக்கு மிகவும் இயல்பாகவே வரும். எனவே ஞான கர்ம சமுச்சாய கோட்பாடு ஏற்க கூடியதல்ல என சங்கரர் கூறுகிறார்.
ஞானகர்மசமுச்சாயத்தை ஆதரித்தல்
[தொகு]பகவான் கிருஷ்ணர் அருச்சுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் ஞான கர்ம சந்நியாச யோகத்தில் கர்மாவையும், ஞானத்தையும் கலந்து உரைத்துள்ளார்.